HomeTop news‘Masha and the Bear’ கார்ட்டூனுக்கு உக்ரைன் தடை

‘Masha and the Bear’ கார்ட்டூனுக்கு உக்ரைன் தடை

ரஷியாவுடன் நீடித்து வரும் போர் மோதல்களுக்கு மத்தியில், உலகப் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான அனிமேஷன் தொடரான ‘மாஷா அண்ட் தி பியர்’ மீது உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உக்ரைன் கலாச்சார அமைச்சர் டெட்டியானா பெரெஷ்னா தனது சமூக ஊடகப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இந்த அனிமேஷன் தொடரை தயாரித்து விநியோகிக்கும் ரஷிய நிறுவனங்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘மாஷா அண்ட் தி பியர்’ தொடரை தயாரிக்கும் ‘அனிமக்கார்ட்’ ஸ்டுடியோ மற்றும் அதன் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஆணைகளில் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மத்தியில் தந்திரமான முறையில் ரஷியாவுக்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பும் வகையில் இந்த கார்ட்டூன் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷியாவின் இத்தகைய மறைமுக பிரச்சார நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கார்ட்டூனில் சோவியத் ஒன்றிய காலத்து அடையாளங்கள் மற்றும் ரஷிய இராணுவ பாணியிலான தொப்பிகள் உள்ளிட்ட கூறுகள் நேர்மறையாக சித்தரிக்கப்படுவதாக உக்ரைனின் நட்பு நாடுகளான பிரிட்டன் மற்றும் எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகளும் முன்னதாக விமர்சித்திருந்தன.

“ரஷியாவின் இத்தகைய நச்சுப் பிரச்சாரங்களுக்கு குழந்தைகளின் திரைகளில் இடமில்லை — உக்ரைனில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும்” என கலாச்சார அமைச்சர் பெரெஷ்னா தெரிவித்துள்ளார்.

இந்தத் தடையின் மூலம் உக்ரைனில் ‘மாஷா அண்ட் தி பியர்’ தொடரின் ஒளிபரப்பு மற்றும் விநியோகம் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யூடியூப் உள்ளிட்ட சர்வதேச இணைய தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொடரின் மூலம் தயாரிப்பு நிறுவனத்துக்கு கிடைக்கும் வருவாயை முடக்குவதற்கும், அதன் சர்வதேச விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்கும் உக்ரைன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், ‘அனிமக்கார்ட்’ நிறுவனம் உக்ரைனின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. தாங்கள் ரஷிய அரசிடமிருந்து எந்தவித நிதியுதவியும் பெறவில்லை என்றும், சுயாதீனமான கலை நிறுவனமாக செயல்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனின் நடவடிக்கையை ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கேலி செய்துள்ளார். “உக்ரைன் தற்போது கார்ட்டூன்களுக்கு எதிராகவும் போரைத் தொடங்கியுள்ளது” என அவர் விமர்சித்துள்ளார்.

உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகி வரும் ‘மாஷா அண்ட் தி பியர்’ தொடருக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக, அதன் யூடியூப் காணொளிகள் உலகளவில் பல பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular