இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
கொழும்பில் தனது இராஜதந்திரப் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் நடைபெற்ற வாழ்த்து மற்றும் பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ (Landau) தலைமையில் எரிக் மேயர் பதவியேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட மூத்த வெளியுறவுச் சேவை அதிகாரியான எரிக் மேயர், தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த பணியகத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் புதிய தூதுவரை வரவேற்றுள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், எரிக் மேயரின் தலைமையின் கீழ் பணியாற்ற எதிர்பார்ப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் எரிக் மேயரின் பதவிக்காலம் கவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வரும் நிலையில், எரிக் மேயரின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
புதிய தூதுவரை கொழும்பில் வரவேற்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
