அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (03) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த வெள்ள எச்சரிக்கை, நாளை (04) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையோர தாழ்நிலப் பகுதிகளுக்கு பொருந்தும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, மகாவலி கங்கையை அண்மித்து மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களிலும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என்பதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
