ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரை, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்கால அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கைத் தொடர முடியாது என அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, குறித்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனைகள் இடம்பெற்ற நிலையில், அது தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
