நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையோர பகுதிகளுக்கான முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அந்த எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி காலை 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலைமையை அவதானித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிகள் ஊடாகச் செல்லும் உப வீதிகளில் பயணிக்கும் சாரதிகள், சீரற்ற வானிலை மற்றும் வெள்ள அபாய நிலைமைகளை கருத்தில் கொண்டு மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
