HomeTop newsமகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு - பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட எச்சரிக்கை

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு – பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மகாவலி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள மாணவர் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் தங்களது பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

நேற்று (02) இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பேராதனையில் அமைந்துள்ள “கருப்புப் பாலம்” பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாலம் புனரமைப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பணித்தளத்தின் ஒரு பகுதி வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அங்கு பயன்படுத்தப்பட்ட பல இயந்திரங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில கட்டுமான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (03) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த வெள்ள எச்சரிக்கை, நாளை (04) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மகாவலி ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், எதிர்வரும் நாட்களிலும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular