அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சவூதி அரேபியா தனது சொந்த அணு எரிபொருளை குடிமைப் பயன்பாட்டு அணு உலைகளுக்காக செறிவூட்ட அனுமதிக்கும் 30 ஆண்டு கால அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சவூதி அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்த அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவ உதவிகளை வழங்கவுள்ளன. அதேவேளை, யுரேனியம் செறிவூட்டல் அவசியமானதா, வணிக ரீதியாக சாத்தியமானதா என்பதை அமெரிக்கா–சவூதி கூட்டு குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கூடுதல் நெறிமுறை எனப்படும் “தங்கத் தர” (Gold Standard) மேற்பார்வை ஒப்பந்தத்தில் சவூதி அரேபியா கையெழுத்திட வேண்டிய கட்டாயம் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, இருதரப்பு பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றின் கீழ் கண்காணிப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.
அதேவேளை, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சவூதி அரேபியா தனது சொந்த யுரேனியம் செறிவூட்டல் தொழில்நுட்பத்தை உருவாக்கவோ அல்லது பிற நாடுகளிடமிருந்து அதனைப் பெறவோ முடியாத வகையில் இந்த ஒப்பந்தத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் காங்கிரஸின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், மத்திய கிழக்கின் பாதுகாப்பு சூழல் மற்றும் அணு ஆயுதப் பரவல் தொடர்பான அச்சங்கள் காரணமாக இது சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் வழங்கப்படுவது குறித்து இஸ்ரேல் நீண்டகாலமாக கவலை வெளியிட்டு வரும் நிலையில், ஈரான் தனது அணுத் திட்டத்தை தொடரும் என அறிவித்திருப்பதும் இந்த விவகாரத்திற்கு கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், சவூதி அரேபியா–இஸ்ரேல் உறவு இயல்பாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக குடிமை அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்திருந்தது. எனினும், 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் மந்தமான நிலையில், டிரம்ப் நிர்வாகம் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுத்தது.
