முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், சம்பவம் தொடர்பான இறுதி முடிவு அதிகாரப்பூர்வ விசாரணைகளின் பின்னரே உறுதிப்படுத்தப்படும்.
சி.டி. விக்ரமரத்ன 1986ஆம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்தார். அதன்பின்னர் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர், நாட்டின் பொலிஸ் சேவையில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, சி.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஒரு ஆண்டு ஏழு மாதங்கள் அந்தப் பொறுப்பில் பணியாற்றிய அவர், பின்னர் இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்.
2023ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி, பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வு பெற்றிருந்தார்.
