கூட்டான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய போட்டித்தன்மை மிக்க நிலைபேறான சுற்றுலாத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடியும்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கூட்டான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய போட்டித்தன்மை மிக்க நிலைபேறான சுற்றுலாத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடியும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் 13 ஆவது தடவையாக நடத்தப்படும் இலங்கையின் முன்னணி சுற்றுலாத் துறைக் கண்காட்சியான ‘சஞ்சாரக்க உதாவ (Sancharaka Udawa) 2026’ நிகழ்வில், மே 15 முற்பகல் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் (SLTPB) ஒத்துழைப்புடன், இலங்கை உள்நாட்டுச் சுற்றுலாச் சங்க அமைப்பாளர்களினால் (SLAITO) ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி, 2026 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொழும்பு BMICH வளாகத்தில் நடைபெறும்.
இம்முறை கண்காட்சியில் 250 இற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பதுடன், 300 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 100 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் வர்த்தகச் சந்திப்புகள் (B2B), கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியன 15, 16 ஆகிய இரு தினங்களிலும் நடைபெறவுள்ளன.
இம்முறை கண்காட்சியில் முதன்முறையாக வெளிநாட்டு அனுசரணையுடன் கொள்வனவாளர்களுக்கு (Foreign Hosted Buyers) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை ஒரு விசேட அம்சமாகும். இதன் மூலம் உள்நாட்டுச் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருப்போருக்கு சர்வதேச சந்தையுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான முன்னெப்பொழுதும் இல்லாத வாய்ப்புகள் கிட்டவுள்ளன.
‘சஞ்சாரக்க உதாவ 2026’ கண்காட்சியைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களுக்காகத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்:
நிலைபேறான, அனைவரையும் உள்ளடக்கிய, சுற்றாடல் நேய சுற்றுலாத் துறையொன்றைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் தொலைநோக்காகும். தற்போது எதிர்நோக்க வேண்டியுள்ள சுற்றாடல், அரசியல், பொருளாதார மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், சுற்றுலாத் துறை அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துச் செயற்படுவது மிகவும் அவசியமானதாகும். உலகளாவிய சுற்றுலாத் தளத்தில் இலங்கையைச் சரியான இடத்தில் நிலைநிறுத்துவதும், ஒரு சுற்றுலா இலக்காக நாட்டின் சர்வதேச வர்த்தக நாமத்தைப் பலப்படுத்துவதும் மிக முக்கியமானதாகும்.
இத்துறையில் மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக இளைஞர், யுவதிகளின் வருங்கால வேலைவாய்ப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தார். இளைஞர்கள் சுற்றுலாத் துறை போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், இதற்காகச் சுற்றுலாத் துறைக்கும் கல்வித் துறைக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டுச் சுற்றுலாத் துறையைப் பலப்படுத்துவதன் ஊடாக ஒட்டுமொத்த சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்த பிரதமர், சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தைப் பலமாகக் கட்டியெழுப்பவும், நிலைபேறான முன்னேற்றத்தை அடையவும் அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையில் முறையான கூட்டான்மையையும் ஒத்துழைப்பையும் பேணுவது அத்தியாவசியமாகும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, இலங்கை உள்நாட்டுச் சுற்றுலாச் சங்க அமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நளின் ஜயசுந்தர உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தொழில்முனைவோர், கண்காட்சியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
