ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தாவுக்கு 5½ ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (15) இந்தத் தீர்ப்பை வழங்கியதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
இதனுடன், தாக்குதலுக்குள்ளான பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 24 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், சனத் நிஷாந்த 2024 ஜனவரி 25 அன்று கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்ததால், இன்று நீதிமன்றத்தில் அவரது சகோதரர் ஜகத் சமந்த மட்டும் முன்னிலையாகியிருந்தார்.
சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது
