HomeTop newsஇனங்களுக்கு இடையிலான சகவாழ்வைப் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இன்றியமையாதது

இனங்களுக்கு இடையிலான சகவாழ்வைப் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இன்றியமையாதது

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களும் சகோதரத்துவத்துடன் வாழும் ஆனைமடுவ போன்ற பல்லினப் பண்பாட்டுப் பிரதேசங்களில், இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நல்லிணக்கத்தையும் மேலும் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவம் அவசியமானது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆனைமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த தலைமைத் தேரருக்கு ராஜவன்னி மற்றும் குமாரவன்னி ஆகிய இரு பிரதேசங்களுக்குமான பிரதம சங்கநாயக்கர் பதவியை வழங்குவதை முன்னிட்டு, 13ஆம் திகதி ஆனைமடுவ சுதம்பாயவில் நடைபெற்ற ‘சன்னஸ் பத்திரம்’ கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மல்வது விஹாரை பீடத்தின் அநுநாயக்கர் நியாங்கொட விஜிதசிறி தலைமைத் தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் குறித்த ‘சன்னஸ் பத்திரம்’ ஆனைமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த தலைமைத் தேரரிடம் கையளிக்கப்பட்டது. ‘விஜினிபத’ எனும் விசிறியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

ஆனைமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த நாயக்க தேரர், சுமார் 50 ஆண்டுகாலத் துறவற வாழ்விலும் 35 ஆண்டுகால ஆசிரியர் சேவையிலும் பௌத்த சாசனத்திற்கும் நாட்டின் கல்வித் துறைக்கும் அளப்பரிய சேவையாற்றிய ஒரு துறவியாவார். அவர் வெறுமனே மதச் சடங்குகளுக்கு மாத்திரம் தம்மை மட்டுப்படுத்திக்கொள்ளாது, இப்பிரதேச சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் இன்ப துன்பங்களின்போது நிழல் போல உடனிருப்பவர். குறிப்பாக, கடந்த ஆண்டு திடீர் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அவர் வழங்கிய மனிதநேயத் தலைமைத்துவமானது முழுப் பிரதேசத்திற்கும் பெரும் சக்தியாக அமைந்ததை நினைவுபடுத்த வேண்டும்.

அத்தோடு, பரமாகந்த ரஜமகா விஹாரை உள்ளிட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற புனிதத் தலங்களைப் புனரமைத்து, அவற்றை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதில் அவர் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பரிவுமிக்க மக்களைக் கொண்ட ‘புதிய மறுமலர்ச்சி யுகத்தை’ நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் அரசாங்கத்தின் நோக்கத்தை அடைந்துகொள்வதில், இத்தேரரைப் போன்ற நடைமுறைச் சாத்தியமான மதத் தலைவர்களின் வழிகாட்டலும் ஆசீர்வாதமும் அரசாங்கத்திற்குப் பெறுமதிமிக்கதாகும்” எனப் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முப்பிரிவின் மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், வடமேல் மாகாண ஆளுநர், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, தியவதன நிலமே நிலங்க தேல பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளுடன், பெருமளவு பக்தர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular