Homeசெய்திமத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம்!

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம்!

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடந்த டித்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன், நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அதன்படி, உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் எனத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செயல்முறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான முன்மொழிவுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

அந்த அனைத்து முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இலங்கையின் உயர் நீரேந்துப் பிரதேசங்களின் சுற்றாடல் மறுசீரமைப்பு மற்றும் முகாமைத்துவம் ஆகிய பணிகள் இந்தப் புதிய அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படுவதுடன், தேசிய நீர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு, அனர்த்த அபாயக் குறைப்பு, பொருளாதார மற்றும் வலுசக்தி செயற்திறன், காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடைதல் மற்றும் அவற்றின் பாதிப்புகளைக் குறைத்தல், இயற்கை மூலதனக் கணக்கீடு ஆகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் வலுசக்தி அமைச்சின் செயலாளருமான ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள், சூழலியலாளர்கள், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular