Homeஉள்நாடுஅமரர் கே. வேலாயுதம் - மலையகத்தின் குரலாய் ஒலித்த கொள்கைவாதி!

அமரர் கே. வேலாயுதம் – மலையகத்தின் குரலாய் ஒலித்த கொள்கைவாதி!

மலையகத் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 76ஆவது ஜனன தினம் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது.

கல்வி, அனுபவம், ஆளுமை ஆகியவற்றால் மிளிர்ந்த அவரது நினைவுகளை மீட்டிப்பார்ப்பது மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

ஆரம்ப காலமும் கல்விப் பின்னணியும்:

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நுவரெலியா, உடபுஸல்லாவ கார்கிலிஸ் தோட்டத்தில் பிறந்த வேலாயுதம், தனது ஆரம்பக் கல்வியை தோட்டப் பாடசாலையிலும், உயர் கல்வியை பதுளை ஊவா கல்லூரியிலும் பயின்றார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவர், ஆரம்பத்தில் ஆங்கில தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவந்ததுடன், சிறிது காலம் பத்திரிகை நிருபராகவும் பணியாற்றி சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்தார்.

அரசியல் மற்றும் தொழிற்சங்கப் பிரவேசம்:
1971 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த வேலாயுதம், ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் உத்தியோகத்தராக இணைந்து தனது சேவையைத் தொடங்கினார். ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, காமினி திஸாநாயக்க போன்ற ஐ.தே.கவின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த அவர், கட்சியின் கொள்கைகளில் உறுதியாக நின்றார்.

தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டம்:
ஆரம்பம் முதலே பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுத்தார். தொழிலாளர்களுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்து, அவர்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். தொழில் சட்டங்கள் தொடர்பாக ஆழமான அறிவையும் சிந்தனையையும் கொண்டிருந்த அவர், பல நாடுகளுக்கும் சென்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அனுபவங்களைப் பெற்றுக்கொண்டார்.

சாதனைகளும் பதவிகளும்:

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், ‘தொழிற்சங்க கல்வி’ என்ற கட்டமைப்பை உருவாக்கி பல இளைஞர்களுக்கு வழிகாட்டினார். ஊவா மாகாண சபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் எனப் பல உயர்பதவிகளை வகித்தார்.

கலை, கலாசாரம் மற்றும் கல்விக்கான பங்களிப்பு:
தொழிற்சங்கப் பணிகளுக்கு அப்பால், மலையக தமிழர்களின் கலை, கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் அக்கறை காட்டினார். ஊவா மாகாணத்தில் தமிழ் சாகித்திய விழாக்களையும் கலை, கலாசார விழாக்களையும் முன்னின்று நடத்தினார். கல்விசார் சமூகத்துடன் நல்லுறவைப் பேணி, அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தார்.

காணி உரிமை மற்றும் வீட்டுத் திட்டம்:
நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிவீட்டுத் திட்டத்தை ஆரம்பித்ததுடன், அவர்களுக்கான உறுதிப்பத்திரத்தை வழங்குவதிலும் உறுதியாக நின்று செயற்பட்டார். ‘பசுமைபூமி’ திட்டம் மூலம் மலையக மக்களுக்கு காணி உரிமை கிடைக்க பிள்ளையார்சுழி போட்டவர் இவரே.

கொள்கை உறுதி:

46 வருடங்களாக ஐ.தே.கவில் பயணித்த அவர், கொள்கை மாறாத ஒரு அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். கட்சித் தாவல் என்ற பேச்சிற்கே இடம் கொடுக்காத அவர், பட்டம் பதவிகளுக்காக ஆசைப்படாது மக்களுக்கும், கட்சிக்கும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டார். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர், பல மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.

மலையக மண்ணின் மைந்தனாகவும், தொழிலாளர்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்த அமரர் கே. வேலாயுதம் அவர்களின் சேவைகள் மலையக வரலாற்றில் என்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular