Homeஉள்நாடுபயணிகள் இடைநடுவில் இறக்கம்: பேருந்து சேவையில் ஈடுபட தடை!

பயணிகள் இடைநடுவில் இறக்கம்: பேருந்து சேவையில் ஈடுபட தடை!

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அதே பேருந்து வேறொரு தனியார் நிறுவனத்தின் (ஆடைத் தொழிற்சாலை) பணியாளர்களை ஏற்றிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் தனியார் பேருந்தின் வழியனுமதிப்பத்திர உரிமையாளர் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விசாரணையின் போது, பேருந்து திருத்த வேலைக்குச் சென்றதும், அதன் பின்னர் ஆடைத்தொழிற்சாலை பயணிகளை ஏற்றச் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பொறுப்பற்ற விதத்தில் இடைநடுவில் இறக்கிவிட்ட தவறான செயற்பாட்டுக்காக, தனியார் பேருந்து 3 நாட்களுக்குச் சேவையில் ஈடுபடுவதற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இடைநடுவில் இறக்கி விடப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய பயணிகளுக்கு உரிய பதிலளிக்காது முரண்பட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்துனர் 5 நாட்களுக்குச் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் அவர் ஈடுபடமாட்டார் என்பதற்கான உறுதியுரையும் அதிகார சபையால் பெறப்பட்டுள்ளது.

பாதுகாப்பானதும், தரமானதுமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறுவப்பட்டுள்ளது. எனவே, பொதுப் போக்குவரத்தின் போது இவ்வாறான அசௌகரியங்கள், விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தயங்காது ஆதாரங்களுடன் (ஒளிப்படம் அல்லது காணொலி) 071 9090900 என்ற வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதிகார சபையின் தலைவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular