HomeTop news“என்னைச் சிறையில் அடைக்கலாம்.. என் சிந்தனைகளை அல்ல” - நாமல்

“என்னைச் சிறையில் அடைக்கலாம்.. என் சிந்தனைகளை அல்ல” – நாமல்

சிறைவாசத்தின் 50 நாட்களை முன்னிட்டு நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் விமர்சனங்கள், நாட்டின் பொருளாதார நிலைமை, கலாசாரப் பாதுகாப்பு மற்றும் தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், தனது சிந்தனைகளையும் அரசியல் அணியினரின் அபிலாஷைகளையும் சிறைப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது சிறைவாசத்தின் 50 நாட்கள் நாளை (ஒக்டோபர் 24) நிறைவடைவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சிறைச்சாலைச் சுவர்களுக்கு அப்பால் மக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னைச் சிறையில் வைத்திருப்பது குறிப்பிட்ட குழுவொன்றின் அழுத்தத்தின் வெளிப்பாடு எனக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, அரசியல் என்பது கூட்டங்கள், உணர்ச்சிமிக்க உரைகள் மற்றும் கைதட்டல்களுடன் மாத்திரம் தொடர்புடையதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த 50 நாட்களையும் தனது வாழ்க்கையில் இழந்த காலமாகப் பார்க்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், வாழ்க்கையை மீண்டும் கற்றுக்கொண்ட காலமாகவே அதனைப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கலாசாரம், மதம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் தனது அறிக்கையில் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

காவந்திஸ்ஸ யானை ராஜாவைப் பாதுகாக்கத் தவறியமை நாட்டுக்கு வேதனையளிக்கும் விடயம் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் ஒவ்வொரு உயிரினத்தையும் பாதுகாப்பது குடிமக்களின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் அரசியல் கலாசாரத்தில் ஆழமான தடத்தைப் பதித்தவர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தனது தந்தை நன்கு அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மதம் மற்றும் கலாசாரம் தொடர்பான விமர்சனங்களுக்கும் அவதூறு மற்றும் வெறுப்பைப் பரப்பும் செயல்களுக்கும் இடையில் வேறுபாடு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதம் என்பது போட்டியல்ல, சகவாழ்வு எனத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, நாட்டின் வளங்கள், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் கேலி செய்யப்படவோ சிறுமைப்படுத்தப்படவோ கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாகவும் அவர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

நாட்டின் கருவூலம் நிரம்பியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மக்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், முதலீட்டு வாய்ப்புகளும் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கான பொறுப்பை ஒரு குடும்பத்தின் மீது சுமத்துவதன் மூலம் அவற்றை மறைக்க முயற்சிப்பது அரசாங்கத்தின் திறமையின்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு நீதி கிடைக்கும் என்றும், நீதிமன்றத்தின் ஊடாக ஒருநாள் குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது சிறைவாசத்தினால் நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமானால், 50 நாட்கள் மட்டுமன்றி 500 நாட்களுக்கும் சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்தல், இறக்குமதி விலையில் எரிபொருளை வழங்குதல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்குதல், பிணையமற்ற வட்டியில்லாக் கடன்களை வழங்குதல் மற்றும் வாகனங்களை 12 இலட்சம் ரூபாவுக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரிசியின் விலையைக் குறைத்தல், சுகாதாரம், கல்வி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, நாட்டின் கலாசாரம் பாதுகாக்கப்படுமானால், தனது சிறைவாசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியில், உண்மையான வெற்றி என்பது அதிகாரத்தில் தங்கியிருப்பதல்ல, மக்களின் இதயங்களில் இடம்பிடிப்பதே எனக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, தன்னைச் சிறையில் அடைக்க முடிந்தாலும் தனது அரசியல் அணியினரின் அபிலாஷைகளைச் சிறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரில், 2026 ஒக்டோபர் 23ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular