HomeTop newsஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் - அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வலியுறுத்தல்

ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் – அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வலியுறுத்தல்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுவிக்கப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க ​தேரர் வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் (செயல்பாடுகள் மற்றும் ஊடகம்) சேனக்க பள்ளேதென்ன உள்ளிட்ட சிறைச்சாலை திணைக்கள உயர் அதிகாரிகள் குழுவினர் இன்று (16) அஸ்கிரிய மகா விஹாரையில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரை விடுவிப்பதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா என மகாநாயக்க தேரர் வினவியதற்கு, இதுவரையில் அது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பள்ளேதென்ன பதிலளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த மல்வத்து மகாநாயக்க தேரர், ஏதேனும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிக்குகளை விளக்கமறியலில் வைப்பதாயின் அல்லது சிறையிலடைப்பதாயின் அதற்காகத் தனியானதொரு இடத்தை நிறுவ வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்ற போதிலும், எந்தவித இறுதித் தீர்மானமும் எட்டப்படாமல் அக்கூட்டம் நிறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிக்குகளைத் தடுத்து வைப்பதற்குத் தனி இடம் அமைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு மதக் காரியங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களைக் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என்றும் மல்வத்து மகாநாயக்க தேரர் மேலும் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular