HomeTop newsஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு

ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (4) பிற்பகல் உத்தரவிட்டார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றத்தின் அனுமதியின்றி உரையாற்றியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் அப்போதைய ஹோமாகம நீதவானால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டை விசாரித்த அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் குழாம், 2018 ஆம் ஆண்டு மே 24 ஆம் திகதியன்று தேரரை குற்றவாளியாகக் கண்டு, 6 வருடங்களில் அனுபவித்து முடிக்கும் வகையில் 19 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவித்தார்.

இதற்கு எதிராக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குறித்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என அண்மையில் தீர்ப்பளித்தது.

பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்ட போதிலும் தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையைப் பிறப்பித்ததுடன், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தது.

இந்த பிடியாணைக்கு அமைய, கடந்த 3 ஆம் திகதி இரவு களுத்துறை, தீனியாவல பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular