புதிய சுற்றில் ‘அஸ்வெசும‘ நலன்புரிப் திட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் சில வாரங்களுக்குள் புதிய பயனாளர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும் என்றும், அதனடிப்படையில் எவரேனும் மேன்முறையீடு செய்ய விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், இம்மாதத்திற்குள் அப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும பயனாளர்களின் எண்ணிக்கை 1,773,445 ஆக இருந்த போதிலும், அது 2024 ஆம் ஆண்டில் 1,761,116 ஆகப் பதிவாகியிருந்தது.
அத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டில் பயனாளர்களின் எண்ணிக்கை 2,439,917 ஆகப் பதிவாகியிருந்த போதிலும், இந்த ஆண்டில் பயனாளர்களின் எண்ணிக்கை 1,251,522 ஆகக் குறைவடைந்துள்ளது.
அஸ்வெசும பயனாளர்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்கும் போது தீவிர வறுமைக்கோட்டிலுள்ளோர், வறுமைக்கோட்டிலுள்ளோர், ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோர் மற்றும் இடைநிலை நிலையில் உள்ளோர் என 4 பிரிவுகளின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.
இதில் கடந்த டிசம்பர் மாதத்துடன் இடைநிலை பிரிவினருக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்ததுடன், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தன.
இதனடிப்படையில், தீவிர வறுமைக்கோட்டிலுள்ளோர் மற்றும் வறுமைக்கோட்டிலுள்ளோர் ஆகிய இரு பிரிவினருக்கு மட்டுமே அரசாங்கம் அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவை வழங்கி வந்த நிலையிலேயே, மீண்டும் இந்த கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
