ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தை மையமாகக் கொண்டு ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சவுதி அரேபிய எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக கூறப்படும் ஹவுதி, முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகா துறைமுகத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், பாப் அல்-மாண்டெப் ஜலசந்தி வழியாக இடம்பெறும் சர்வதேச கடல் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுடனான மோதல் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகளால் தனது எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் சவுதி அரேபியா 1980ஆம் ஆண்டு கிழக்கு – மேற்கு எண்ணெய் பைப்லைனை அமைத்திருந்தது.
இந்த பைப்லைன் மூலம் கச்சா எண்ணெயை செங்கடல் பகுதியை நோக்கி கொண்டு சென்று, அங்கிருந்து சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான மாற்று வழியை சவுதி அரேபியா உருவாக்கியிருந்தது.
இந்நிலையில், ஹவுதி படைகள் பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியை நெருங்கி வருவதாக கூறப்படும் சூழ்நிலையில், தங்களது எண்ணெய் பைப்லைனை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், ஈராக் பிரதேசத்தில் இருந்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய எண்ணெய் பைப்லைனை தற்காலிகமாக மூட சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இடம்பெறும் சர்வதேச எண்ணெய் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சவுதி அரேபியாவின் முக்கிய பைப்லைன் மூடப்பட்டுள்ளமை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, ஈராக் பிரதேசத்தில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் விசாரணை நடத்த ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டு சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், சவுதி அரேபியாவின் எண்ணெய் வளங்களை தாங்களே தாக்கியதாக ஹவுதி அமைப்பு தெரிவித்திருந்தது. எனினும், பிராந்திய அதிகாரிகள், ஹவுதியின் ஆதரவுடன் ஈராக்கில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்ததாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியை நோக்கி ஹவுதி முன்னேறி வருவது, அமெரிக்காவுக்கு எதிரான ஈரானின் போராட்டத்திற்கு புதிய கடல்வழிப் பாதையையும் அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பையும் உருவாக்கக்கூடும் என பிராந்திய விவகார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
