அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாய்’. கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் கவின், நயன்தாராவுடன் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, வெளியான முதல் நாளுடன் ஒப்பிடுகையில் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கான திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி 15 நாட்களைக் கடந்துள்ள ‘ஹாய்’ திரைப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, இப்படம் உலகளவில் சுமார் ரூ.18 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
