HomeTop newsநேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழப்பு 734 ஆக அதிகரிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழப்பு 734 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சுமார் 3,000 பேரின் நிலை தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நேபாளம் – திபெத் எல்லைக்கு அருகில் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக போட்டேகோஷி ஆற்றில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மத்திய நேபாளத்தின் பல பகுதிகள் வரலாறு காணாத பேரழிவை எதிர்கொண்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று வரை 600க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. தொடர்ந்து இடம்பெற்று வரும் மீட்புப் பணிகளில் இன்று மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது.

இடிபாடுகள் மற்றும் சேற்றுக் குவியல்களில் இருந்து மீட்கப்படும் உடல்கள் மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் குவிந்து வருவதால், புதிதாக மீட்கப்படும் உடல்களை வைப்பதற்கான இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்வேறு பகுதிகளில் தற்காலிக பிரேத அறைகள் அமைக்கப்பட்டு உடல்களைப் பாதுகாக்கும் பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000க்கும் மேற்பட்டோர் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

காணாமல் போனவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட 167 இந்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுவதால், இந்தியாவிலும் சோக நிலை தொடர்கிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஐந்தாவது நாளாக இன்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரவு பகலாக நடைபெற்று வரும் இந்தப் பணிகளில் நேபாள இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் உள்ளிட்ட 11,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு நிபுணர்களும் மீட்புப் பணிகளில் இணைந்துள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் மூலம் நேற்று வரை 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போட்டேகோஷி ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களை மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இமயமலை எல்லைப் பகுதியில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் போட்டேகோஷி ஆறு, கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின்போது பெருமளவிலான நீரை மத்திய நேபாளப் பகுதிகளுக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேபாளத்தின் பல்வேறு சுரங்கங்களில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட நீர்மின் திட்டப் பணியாளர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களை மீட்பதற்காக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் சிறப்பு மீட்புக் குழுக்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளன.

இந்தப் பேரிடரால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைப்பதற்கும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பில்லியன் கணக்கில் நிதி தேவைப்படும் என நேபாள அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதுடன், சர்வதேச நாடுகளிடமிருந்து மேலதிக உதவிகளையும் கோரியுள்ளது.

பேரிடருக்கு பனிப்பாறைச் சரிவு காரணமாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவும் இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறைகள் மற்றும் பனிப்பாறை ஏரிகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சூழவுள்ள இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறைகளின் நிலை மற்றும் பனிப்பாறை ஏரிகளின் நீர்மட்டம் தொடர்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளிடமிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் மனிதாபிமான உதவிகளுக்காக மில்லியன் கணக்கான நிதியை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

அதேவேளை, சீனாவும் நேபாளத்திற்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular