புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 3.0 மீற்றர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.
இதன் காரணமாக சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியமும் உள்ளது.
இந்தக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்குச் வெப்பமான வானிலை தொடர்பான அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (31) வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
