வைத்தியப் பிரிவுகளுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி வைத்திய சேவை மற்றும் இலவச சுகாதார கட்டமைப்பை நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் முயற்சியொன்று தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களுக்கும் ஏனைய வைத்தியப் பிரிவுகளுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கையொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிடுகின்றது.
நாட்டில் காணப்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற நிலை காரணமாக விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியர்களை நாட்டிற்குள் தக்கவைத்துக் கொள்வது ஒரு பிரச்சினையாக மாறியிருந்ததாகவும், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் வைத்திய தொழில்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அந்த சங்கம், அனைத்துப் பிரிவினரையும் நாட்டிற்குள் தக்கவைத்துக் கொள்வதற்காக “இலங்கை வைத்திய சேவை” என்ற பெயரில் புதிய சேவைப் பிரிவு மற்றும் சம்பளக் கட்டமைப்பை ஸ்தாபிக்க அங்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது, விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியர்களையும் நாட்டிற்குள் தக்கவைத்துக் கொள்வதற்காக தனித்ததொரு சேவைப் பிரிவை ஸ்தாபிப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், விசேட வைத்திய நிபுணர்களுக்கு மாத்திரம் தனித்ததொரு சேவைப் பிரிவை ஸ்தாபிப்பதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் வைத்தியப் பிரிவுகளுக்கிடையில் பிளவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, ஒரு பிரிவினருக்கு மாத்திரம் தனித்ததொரு சேவை யாப்பினை ஸ்தாபிப்பதன் மூலம் இலவச சுகாதார சேவை மற்றும் நோயாளர் பராமரிப்புச் சேவைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் கருத்திற்கொண்டு குறித்த யோசனைக்கு தமது சங்கம் இணங்காது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் தமது வாய்மொழி மற்றும் எழுத்துமூலமான கருத்துக்களை சம்பந்தப்பட்ட குழுவிடம் முன்வைத்துள்ளதாகவும், குழுவின் அறிக்கையின் பிரதியொன்றை வழங்குமாறு சங்கம் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரியிருந்த போதிலும் இதுவரை அது வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தகுந்த தீர்மானங்களை எடுப்பதற்காக சங்கத்தின் மாகாண மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அவசர கூட்டமொன்று கடந்த 28 ஆம் திகதி நடைபெற்றதாகவும், இதற்கமைய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர்களின் உபகுழுவின் அவசர கூட்டமொன்று நாளை (31) நடைபெறவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் இது தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகச் சுட்டிக்காட்டும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வைத்தியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையாகவும் குழு மனப்பான்மையுடனும் சேவையாற்றக்கூடிய ‘இலங்கை வைத்திய சேவையை’ உருவாக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய எதிர்கால தீர்மானகரமான நடவடிக்கைகள் இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
