இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாமினர் இன்றைய தினம் (30) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்’ கீழ் செயல்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் அவர்கள் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.
மத்திய கிழக்கின் யுத்த சூழலுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்ததாக இந்த கலந்துரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி ஈவன் பெபஜியோர்கியு தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் காரணமாக இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான பலம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
