ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடைய அண்மைய சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரவிருக்கும் பாராளுமன்ற அமர்வு காலத்தில், ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகத்தை பிரதிபலிக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பாக அமைச்சருடன் சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என விருப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரையின் நிர்வாகம், ஏற்பாடுகள் மற்றும் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலை முன்னெடுக்க இந்த சந்திப்பு உதவும் என ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், ஹஜ் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர்களின் பங்களிப்பின் மூலம் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தவிர்க்கவும் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த புனித ஹஜ் யாத்திரையின் போது யாத்திரிகர்கள் எதிர்கொண்ட பல்வேறு சிரமங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து சமூகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, அனைத்து தரப்பினரின் பங்களிப்புடனான விரிவான கலந்துரையாடல் அவசியம் எனவும் ரிஷாட் பதியுதீன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
