அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டியுள்ள ஈரான், முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது.
ஈரானின் உயர்மட்ட கூட்டுப் படைத்தளபதி தலைமையகமான கதம் அல்-அன்பியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரானவை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் செயல்பாடுகள் “நம்பிக்கைக்கு எதிரான வெளிப்படையான துரோகம்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது பதிலடி நடவடிக்கையின் முதல் கட்டம் என தெரிவித்துள்ள ஈரான், தாக்குதல்கள் தொடர்ந்தால் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படை விதிமுறைகளே மீறப்பட்டுள்ளதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு தடையும் சர்வதேச எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்து சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. Vance, அமெரிக்கா–ஈரான் இடையேயான 14 அம்ச அமைதி ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், லெபனானில் இஸ்ரேல் மற்றும் Hezbollah அமைப்புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பிராந்திய அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டிருந்த தடைகள் ஓரளவு குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அவர்களின் சிறப்பு தூதர் Steve Witkoff, ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்காக விரைவில் Switzerland செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரத்தில், இடைக்கால ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஈரானின் தூதுக்குழுவும் Switzerland சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்த Esmail Baghaei, “எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படும் கட்டத்தில்தான் அதன் உண்மையான வெற்றி நிரூபிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
