Homeஉலகம்லெபனான் பதற்றத்தால் அமெரிக்கா - ஈரான் உடன்படிக்கைக்கு ஆபத்து

லெபனான் பதற்றத்தால் அமெரிக்கா – ஈரான் உடன்படிக்கைக்கு ஆபத்து

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டியுள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது.ஈரானின் உயர்மட்ட கூட்டுப் படைத்தளபதி தலைமையகமான கதம் அல்-அன்பியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் செயல்பாடுகள் “நம்பிக்கைக்கு எதிரான வெளிப்படையான துரோகம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது தனது பதிலடி நடவடிக்கையின் “முதல் கட்டம்” என்றும், தாக்குதல்கள் தொடர்ந்தால் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் விதிமுறையே மீறப்பட்டுள்ளதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக ஹார்முஸ் ஜலசந்தி விளங்குகிறது. இந்த பாதையில் ஏற்படும் எந்தவொரு தடையும் சர்வதேச எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்து சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அமெரிக்கா-ஈரான் இடையேயான 14 அம்ச அமைதி ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே வெள்ளிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன் மூலம் பிராந்திய அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த தடைகள் ஓரளவு நீங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

ஈரானுடன் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் விரைவில் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், இடைக்கால ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானின் பேச்சுவார்த்தைக் குழுவும் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, “எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படும் கட்டத்தில்தான் அதன் உண்மையான வெற்றி சோதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular