மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் வகையில், 3 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி 75 மில்லிமீட்டரையும், மண் நீர் குறியீடு 100 மில்லிமீட்டரையும் தாண்டியுள்ளதால், மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு, சாய்வுகள் இடிந்து விழுதல், பாறைகள் விழுதல் மற்றும் தரை உள்ளிறக்கம் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை பிரதேச செயலக பிரிவுகள்.
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மதுள, கொடகவெல, எலபாத, கலவான, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல பிரதேச செயலக பிரிவுகள்.
