HomeTop newsகோப்பி விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்

கோப்பி விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்

கோப்பி பயிர்ச்செய்கைக்காக புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக மதிப்புடைய கோப்பி பயிர்ச்செய்கையை இலங்கைக்குள் மேலும் விரிவுபடுத்தும் நோக்குடனேயே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கோப்பி பயிர்ச்செய்கையின் போது ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அதற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கைகளுக்கு இந்த காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கோப்பி கன்றுகளை நட்ட பின்னர் முதல் மூன்று ஆண்டுகளுக்கு, அந்தந்த ஆண்டுகளுக்குரிய காப்புறுதித் தொகையில் 7% பிரீமியம்  கட்டணத்தின் கீழ் இந்த காப்புறுதி வழங்கப்படும்.

அதற்கமைய, முதலாம் ஆண்டிற்கு 510,000 ரூபாயும், இரண்டாம் ஆண்டிற்கு 660,000 ரூபாயும், மூன்றாம் ஆண்டிற்கு 840,000 ரூபாயும் காப்புறுதித் தொகையாகக் கிடைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கோப்பி பயிர்ச்செய்கையின் போது எதிர்கொள்ள நேரிடும் வறட்சி, வெள்ளம், காட்டு யானைகளின் தாக்குதல், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள், பூச்சித் தாக்கங்கள் மற்றும் ஏனைய விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் இதன் மூலம் ஈடுசெய்யப்படும்.

ஒவ்வொரு காப்புறுதிப் பாதுகாப்பிற்கும் காப்புறுதித் தொகையில் 0.5% கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம், திடீர் தீ விபத்துக்கள் மற்றும் நிலச்சரிவு போன்ற கூடுதல் காப்புறுதிப் பாதுகாப்புகளையும் பெற்றுக்கொள்ள காப்பி விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular