அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த நிலையத்தின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், பராமரிப்பு நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள், நிர்வாக அலட்சியம் மற்றும் தரநிலைகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் உரிமையாளரை காவலில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ என்ற பெயரில் இயங்கி வந்த இந்த தனியார் பராமரிப்பு மையத்தில் நேற்று (03) பிற்பகல் திடீரென தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்தின் போது அங்கு சுமார் 72 பேர் தங்கியிருந்த நிலையில், 51 பேர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்ததாகவும், மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதியவர்களுடன் மனநலப் பிரச்சினைகளைக் கொண்ட நபர்களும் இந்த நிலையத்தில் தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்தால் கட்டிடத்தின் பெரும்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீ விபத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாகவே பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
