HomeTop newsடொலர் உயர்வால் மருந்துகளின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை

டொலர் உயர்வால் மருந்துகளின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மருந்துகளின் விலைகளையும் அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில மருந்துகளின் விலைகளை மறுஆய்வு செய்து திருத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், அரசாங்க வர்த்தமானி மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 60 வகை மருந்துகளின் விலைகளையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், டொலரின் மதிப்பு அதிகரிப்பால் பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்வதைப் போல மருந்துத் துறையும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். நாட்டில் பெரும்பாலான மருந்துகள் இறக்குமதியைச் சார்ந்துள்ளதால், நாணய மாற்று விகிதத்தின் தாக்கம் மருந்து விலைகளிலும் பிரதிபலிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அனைத்து மருந்துகளின் விலைகளும் அதிகரிக்காது என்றும், குறிப்பிட்ட சில மருந்து வகைகளின் விலைகளில் மட்டுமே உயர்வு ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular