Homeவிளையாட்டுஉலகக் கோப்பைக்கு முன்பே அர்ஜென்டினாவுக்கு பேரிடி

உலகக் கோப்பைக்கு முன்பே அர்ஜென்டினாவுக்கு பேரிடி

2026 பிபா உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அணியின் கேப்டனும் உலக கால்பந்தின் ஜாம்பவானுமான Lionel Messi, இடது காலில் ஏற்பட்ட தசை சோர்வு காரணமாக காயமடைந்துள்ளதாக அவரது கிளப் அணியான Inter Miami CF அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேஜர் லீக் சாக்கர் போட்டியில் Philadelphia Union அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல் அசிஸ்ட்களை வழங்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

ஆனால் போட்டியின் 73வது நிமிடத்தில் திடீரென தனது இடது தொடையின் பின்பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாற்று வீரரை களமிறக்குமாறு கோரி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அதிகப்படியான பணிச்சுமை காரணமாக அவரது இடது தொடைப் பகுதியில் கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் தசை சோர்வு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக தசை நார் கிழிவு போன்ற மோசமான பாதிப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டாலும், உலகக் கோப்பை நெருங்கும் தருணத்தில் ஏற்பட்டுள்ள இந்த காயம் அர்ஜென்டினா அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மெஸ்ஸி மீண்டும் எப்போது முழு உடற்தகுதியுடன் களமிறங்குவார் என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் ஜூன் மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பையில் அவர் முழுமையாக விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஜூன் 11ஆம் திகதி தொடங்கவுள்ள 2026 FIFA World Cup தொடரில், அர்ஜென்டினா அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 16ஆம் தேதி அல்ஜீரியாவை எதிர்கொள்ள உள்ளது.

38 வயதான மெஸ்ஸி தனது 6வது உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் நிலையில், ஏற்பட்டுள்ள இந்த தசை சோர்வு உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular