சமீரா மெஹ்பூப்தீன், காசா மீதான கடற்படை முற்றுகையை உடைப்பதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச “குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா” (Global Sumud Flotilla) குழுவில் இணைந்திருந்த நிலையில், தற்போது பாதுகாப்பாக இருப்பதுடன் இஸ்ரேல் இலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்பிலுள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முற்றுகையை மீற முயன்றதாகக் கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்களை இஸ்ரேல் விடுவித்து நாடு கடத்தத் தொடங்கியுள்ளதாக அதலா என்ற இஸ்ரேலிய சட்ட ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான சர்வதேச செயற்பாட்டாளர்கள் நாடு கடத்தப்படுவதற்காக எய்லாட் நகரத்திற்கு அருகிலுள்ள பொது விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர், இட்டாமர் பென்-க்விர் வெளியிட்டதாகக் கூறப்படும் காணொளி தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலை மற்றும் வேதனையை வெளிப்படுத்தியிருந்தது.
அந்தக் காணொளியில், கப்பல் குழுவுடன் தொடர்புடைய கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட இலங்கைப் பிரஜைக்கு உடனடி தூதரக அணுகலைப் பெறவும், அவரது பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யவும், விரைவான மற்றும் பாதுகாப்பான நாடு திரும்பலை ஏற்பாடு செய்யவும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்துடன் இராஜதந்திர வழிகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
“வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை அரசு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது,” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மெஹ்பூப்தீனுடன் தொடர்பிலுள்ள வட்டாரங்களின் தகவலின்படி, அவர் இஸ்தான்புல் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக ரமோன் விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறப்படுவதற்கு முன், இலங்கை தூதரக அதிகாரிகள் அவரைச் சுருக்கமாகச் சந்தித்ததாகவும், அப்போது “நான் நலமாக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 5:50 மணியளவில் அவர் இஸ்தான்புல் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், தேவையான உதவிகளை வழங்குமாறு அங்காராயிலுள்ள இலங்கை தூதரகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச ஒற்றுமைப் பணியான “குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா”வில் உலகின் சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
