வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பு (e-DAS) தொடர்பான அவசர தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அனைத்து ஆவணச் சான்றளிப்பு சேவைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள தூதரக விவகாரப் பிரிவின் தலைமை அலுவலகம் மட்டுமன்றி, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களின் சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுடன் இணைந்து, ‘e-DAS’ முறைமையை விரைவில் வழமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இணையத்தின் மூலம் நேரம் முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளை அறிய ‘e-Channeling’ முறைமையை தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முறைமை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன், அதுகுறித்த தகவல் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த திடீர் சேவைத் தடை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு தூதரக விவகாரப் பிரிவு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டுள்ளது.
