சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாக இல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் நடத்திய விசேட பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வரவேற்கும் வகையில் இன்று (14) விசேட வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பீஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ வளாகத்திற்கு முன்னால் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் மற்றும் கௌரவங்கள் வழங்கப்பட்டதையடுத்து, இரு நாட்டுத் தலைவர்களும் ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மாளிகையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள முன்னெப்போதும் இல்லாத திடீர் மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சூழல் மோதல் நிலையை நோக்கிச் செல்வதை ஷி ஜின்பிங் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சீனாவும் அமெரிக்காவும் ‘துசிடைட்ஸ் பொறிக்குள்’ (Thucydides Trap) சிக்காமல், வல்லரசு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய மாதிரியை உருவாக்க முடியுமா? இரு நாடுகளும் இணைந்து உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு உலகிற்கு அதிக ஸ்திரத்தன்மையை வழங்க முடியுமா? இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு அழகான எதிர்காலத்தை இணைந்து உருவாக்க முடியுமா? போன்ற தற்போதைய காலத்தின் கேள்விகளுக்கு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் இணைந்து பதிலளிக்க வேண்டும் என ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் உலகிற்கும் முக்கியமான விடயங்கள் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்புடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, சீன-அமெரிக்க உறவை சரியான திசையில் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு சீன-அமெரிக்க உறவுகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மைல்கல் ஆண்டாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.
