Homeஉள்நாடுடித்வா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை - மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை

டித்வா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை – மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அனர்த்த அபாயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று (10) விசேட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் மேடுகள் இன்னும் நிலைத்திருப்பதாகவும், மண்சரிவுகளால் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான கற்கள் மேலெழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் மிகக் குறைந்த மழை பெய்தால்கூட அந்தக் கற்கள் மீண்டும் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரித்தார்.

முன்னர் மண்சரிவு அபாயம் காணப்பட்டு தற்போது செயலிழந்துள்ள பகுதிகளும், தொடர்ச்சியான மழைவீழ்ச்சியால் மீண்டும் அபாய நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், முதற்கட்டமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவும், மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகளும் அதிக அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் ஆய்வியல் பிரிவின் பிரதம பொறியியலாளர் சாமர யாபா ஆராச்சி கருத்து தெரிவிக்கையில், வானிலைத் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் ஏற்படக்கூடிய அபாய நிலைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

தற்போது 9 பிரதான நீர்த்தேக்கங்களும், 5 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ள போதிலும், அவை இன்னும் அபாய மட்டத்தை எட்டவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், கிரிந்தி ஓயா, வலவை, தெதுரு ஓயா, மல்வத்து ஓயா, களனி மற்றும் களு ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் 25 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 8 ஆம் திகதி அனைத்து மாவட்ட அலுவலகங்களுடனும் இணைந்து எதிர்கால அனர்த்த நிலவரங்கள் தொடர்பாக விசேட ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கருத்து தெரிவிக்கையில், சமூக அடிப்படையிலான பாதுகாப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், மண்சரிவுக்கான அறிகுறிகள் தொடர்பில் மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், அவசர தேவைகள் ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தையோ அல்லது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகங்களையோ தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular