Homeசெய்திசவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்!

சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்!

கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ (Dithva) புயலினால் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, பசறை பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றிலும் சிதைந்து போயின. அதன் விளைவாக, யூரி தோட்டத் தொழிற்சாலைப் பிரிவைச் சேர்ந்த சில குடும்பங்கள், கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ளன.

இந்தத் துயரமான சூழ்நிலையின் உச்சமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மரணமடைந்த ஒருவரின் சடலம், முறையான இடவசதியின்றி ஒரு தற்காலிகக் கூடாரத்தில் வைக்கப்பட்டு, நேற்று (28) அங்கேயே இறுதி கிரியைகளும் நடைபெற்றன.

இச்சம்பவம், மலையக மக்களின் அடிப்படை மனித உரிமைகளே அங்கு எவ்விதம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன என்பதற்கு ஒரு வேதனையான சான்றாகும்.

நிரந்தர வீடற்ற, காணி உரிமையற்ற நிலையில் வாழ்ந்து வரும் மலையக மக்கள், இன்றும் பல்வேறு சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தங்கள் வியர்வையையும் உழைப்பையும் அர்ப்பணித்த இச்சமூகத்திற்கு, இன்றுவரை நிலையான குடியிருப்பும் காணி உரிமையும் வழங்கப்படாதது மிகுந்த கவலையளிக்கிறது.

இருநூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாற்றைக் கொண்ட மலையக மக்கள், இன்னும் எத்தனை காலம்தான் இவ்வாறான தற்காலிக வாழ்வில் தத்தளிக்க வேண்டும்? அவர்களுக்கு நிரந்தர காணி உரிமையையும், கௌரவமான வாழ்வாதாரத்தையும் பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“தேசம் செழிக்க உழைக்கும் கைகளுக்கு – நிலையான காணியும், மனிதத்தன்மையுடனான வாழ்வும் கிடைக்க வேண்டும்” என்பதே எமது முக்கிய கோரிக்கையாகும்.

(நடராஜா மலர்வேந்தன்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular