Homeஉள்நாடுபதுளை, கோபோ தமிழ் வித்தியாலயத்தில் 39வது உத்தியோகபூர்வ வித்தியாலய தினம் கொண்டாட்டம்

பதுளை, கோபோ தமிழ் வித்தியாலயத்தில் 39வது உத்தியோகபூர்வ வித்தியாலய தினம் கொண்டாட்டம்

பதுளை, கோபோ தமிழ் வித்தியாலயத்தின் 39வது உத்தியோகபூர்வ வித்தியாலய தினம், அதிபர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் வித்தியாலய தினம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிடைத்துள்ள குறிப்புகளின்படி, தோட்டப்பகுதி மாணவர்களின் எழுத்தறிவை மேம்படுத்தும் நோக்கில் 1924ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்த “பால் காம்பரா” ஒன்றை மையமாகக் கொண்டு இப்பாடசாலை முன்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இப்பாடசாலை நூற்றாண்டைத் தாண்டிய வரலாற்றைப் பெற்றிருந்தாலும், உத்தியோகபூர்வமாக 1987 மார்ச் 16ஆம் திகதி முதலாவது அதிபரான திருமதி கே. ராஜம்மாள் அவர்களால் சம்பவத்திரட்டு புத்தகத்தில் கையொப்பமிட்டு ஆரம்பிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையின் வரலாற்று விழிப்புணர்வையும் பெருமையையும் பாடசாலை சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்தும் நோக்கில், இவ்வாண்டு முதல் மார்ச் 16ஆம் திகதி வித்தியாலய தினமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பாடசாலையின் அதிபர் எம். எப்.எம். இர்ஷாட் அறிவித்தார்.

காலை 7.45 மணியளவில் பாடசாலை முன்றலில் சங்கீதப் பாட ஆசிரியையான செல்வி என். நிரோஷினியின் தேவாரப் பண்ணிசையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து அதிபரினால் பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களால் பாடசாலைக் கீதம் பாடப்பட்டது.

ஆசிரியர் கே. ஜீவராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.. ஆரம்பப் பிரிவு பகுதித்தலைவர் திருமதி ஆர். ராஜஸ்ரீ அவர்களால் அறிமுக உரை வழங்கப்பட்டதுடன், ஆசிரியை திருமதி சி. கோகிலவாணி அவர்களால் சத்தியப்பிரமாணம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியை திருமதி ஆர. உதயப்ரியா அவர்கள் பாடசாலையின் மகுட வாசகம், நோக்கம் மற்றும் குறிக்கோளை விளக்கினார்.

நிகழ்வில் அதிபர் எம்.எப்.எம். இர்ஷாட் தலைமையுரை நிகழ்த்தியதுடன், முன்னாள் அதிபர்களான எம். சண்முகராஜா மற்றும் எம். வரதராஜா ஆகியோர் விசேட உரைகளை வழங்கினர்.
மேலும், தெஹிகொல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபரும் இப்பாடசாலையின் முன்னாள் ஆசிரியருமான பி. லசன்தன் அவர்களும் கலந்துகொண்டார்.

மாணவர்கள் சார்பில் தரம் 4 மாணவி வி. நிக்ஷிகா மற்றும் தரம் 11 மாணவி ஆர். லக்ஷிகா ஆகியோர் உரையாற்றினர். பின்னர் வித்தியாலய தினத்தை முன்னிட்டு கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் ஆசிரியை திருமதி ஏ. லில்லி தெரேசா நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, பாடசாலை காரியாலயத்தில் முன்னாள் அதிபர்களின் புகைப்பட திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.

முன்னாள் அதிபர்களின் புகைப்படங்களுக்கு அனுசரணை வழங்கிய முன்னாள் அதிபர் எம். வசந்தகுமார், பழைய மாணவரான அமரர் ஜெயபிரகாஷ் அவர்களின் தாயார் திருமதி கே. ஜெயலலிதா மற்றும் புதிய பாடசாலைக் கொடிக்கு அனுசரணை வழங்கிய பழைய மாணவரும் நலன் விரும்பியுமான கார்மேகம் யதுர்ஷன் ஆகியோருக்கு பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் நிர்வாகம் சார்பில் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.

நடராஜா மலர்வேந்தன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular