வடக்கையும், தெற்கையும் நாசமாக்கிய ராஜபக்சக்கள் மற்றும் பிள்ளையானுடன் வாக்கு கேட்டவர்தான் இவர். தமிழ் அரசியலுக்கே அவரால் இழுக்கு. ராஜபக்சக்களின் அவதாரம் அவர்.
இவ்வாறு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ அந்த நாடாளுமன்ற உறுப்பினர் (சாணக்கியன்) தொடர்பில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தேன். ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பன்முகப்படுத்தப்பட்ட நிதியை பெற்றார் என்பது அதில் ஒரு குற்றச்சாட்டாகும்.
2006, 2007, 2008, 2009 களில் நாம் ராஜபக்சக்களுடன் இருக்கவில்லை. 2005 இல் நாம் ராஜபக்ச ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் செய்த அட்டூழியங்களால், மோசடியான அந்த ஆட்சியில் இருந்து வெளியேறினோம்.
வடக்கையும், தெற்கையும் நாசமாக்கிய நபருடன் இணைந்து செயற்பட்டவர்தான் இவர். (சாணக்கியன்) 2012, 2013 களில் ராஜபக்சக்களுடன் ஓட்டு கேட்டுள்ளார்.
பிள்ளையானின் மேடையிலும் இருந்துள்ளார்.
ராஜபக்ச அவதாரம் அவர், சபாபீடத்தை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்கின்றார். ரவிராஜ், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் சபாபீடத்தை அவமரியாதைக்கு உட்படுத்தவில்லை என்பதையே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.” – என்றார்.
