“ராஜபக்சக்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருந்தமை நான் எடுத்த தவறான அரசியல் முடிவாகும். அதனை திருத்திக்கொண்டதால்தான் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னை இரு தடவைகள் சபைக்கு அனுப்பியுள்ளனர்.” – என்று இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பிஆர் என்றழைக்கப்படும் பஸில் ராஜபக்சவால்தான் அவர்களின் ஆட்சி கவிழ்ந்தது. எனவே, தற்போதைய அரசாங்கத்தின் பிஆர் சேறுபூசும் அரசியலை முன்னெடுக்ககூடாது எனவும் அவர் எச்சரித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சாணக்கியன் கூறியவை வருமாறு,
” கடந்த ஆட்சியின்போது பஸில் ராஜபக்சவையும் பிஆர் என்றே அழைப்பார்கள். கடந்த ஆட்சி கவிழ்வதற்கு இந்த பிஆர்தான் காரணம். தற்போதைய ஆட்சியில் சபை முதல்வராக இருக்கும் பிமல் ரத்நாயக்க என்பவரும் பிஆர்தான்.
கடந்த விவாதத்தின்போது கடைசி இரு மணிநேரத்தில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சேறுபூசும் விதத்திலேயே அவர் கருத்துகளை முன்வைத்தார். இதனை நான் கண்டிக்கின்றேன்.
ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர் ஒருவர் தொடர்பில் நான் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தேன். இதனையடுத்தே அவர் சேறுபூசும் விதத்தில் கருத்துகளை முன்வைத்தார்.
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராக இருந்தேன். நான் எடுத்த தவறான அரசியல் முடிவு அது. அதனை திருத்திக்கொண்டேன், எனது மாவட்ட மக்கள் எனக்கு வாக்களித்தார்கள்.
ரவிராஜின் பெயரை சொன்னார்கள், ரவிராஜ் கொல்லப்படும்போது மஹிந்த ராஜபக்சவுடன் வேலை செய்தார்கள். தமது வங்குரோத்து நிலைமையை மறைப்பதற்கு சேறுபூச வேண்டாம்.” – என்றார்.
