எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, பிரெஞ்சு தடயவியல் கணக்கியல் நிபுணர் யூசர் கலீல் (Yousr Khalil) இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஃபோரன்சிக் ரிஸ்க் அலையன்ஸ்’ (Forensic Risk Alliance) நிறுவனத்தின் மூத்த பங்குதாரரான இவர், ஏர்பஸ் விமான விற்பனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் குறித்த சர்வதேச விசாரணையில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக யூசர் கலீல் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்ல் ஹென்னசி ஆகியோரை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பெயரிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 10 ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் குறித்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் போது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன 16 மில்லியன் அமெரிக்க டாலர் கையூட்டுப் (இலஞ்சம்) பேரம் பேசியதாகப் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்தக் கையூட்டு ஏற்பாட்டின் ஊடாகப் பெறப்பட்ட நிதியை நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்டதாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
