அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் உள்ளிட்ட கல்விசார் வெளியீடுகளுக்கு பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்களிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
2024 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிடப்பட்ட நூல்கள் மற்றும் ஏனைய அச்சிடப்பட்ட பொருட்கள் பெறுமதி சேர் வரிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அதேவேளை, அப்பியாசக் கொப்பிகளும் இதற்கு முன்னரே குறித்த வரிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தையும் அத்தியாவசிய கல்விசார் பொருட்களை சாதாரண விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கருத்திற்கொண்டு இந்த வரி நிவாரணம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாடப்புத்தகங்கள், சொல்லகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சிறுவர்களுக்கான படப் புத்தகங்கள், சித்திரம் வரைதல் புத்தகங்கள், கல்விசார் வெளியீடுகள், ஏனைய அச்சிடப்பட்ட நூல்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் ஆகியவற்றைப் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கல்வி, அறிவு மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் அத்தியாவசிய கல்விசார் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதே நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
