HomeTop newsகல்வித் தகுதி சர்ச்சை எதிரொலி - துணை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார் ஜிப்ரான்

கல்வித் தகுதி சர்ச்சை எதிரொலி – துணை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார் ஜிப்ரான்

இந்தோனேசியாவின் துணை ஜனாதிபதி ஜிப்ரான் ரகாபுமிங் ராகா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது தற்போதைய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவுக்கும், முன்னாள் ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கும் இடையிலான அரசியல் கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்தோனேசிய மக்கள் ஆலோசனை அவையின் (MPR) தலைவர் அகமது முசானி, ஜிப்ரான் இன்று தனது இராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த இராஜினாமா கடிதம் தொடர்பான நடைமுறைகளை மக்கள் ஆலோசனை அவை முன்னெடுக்கும் என்றும், அதற்கு 60 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் மகனான 39 வயதுடைய ஜிப்ரான், தனது கல்வித் தகுதிகள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகப் பதவி விலகுமாறு பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம், அவர் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தமைக்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கண்டறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனேசிய சட்டத்தின்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு உயர்நிலைப் பள்ளிக் கல்விச் சான்றிதழ் அவசியமாகும்.

இதனைத் தொடர்ந்து, அவர் சமர்ப்பித்த உயர்நிலைப் பள்ளிக்கு இணையான கல்வித் தகுதிச் சான்றிதழ் தொடர்பிலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியிருந்தது.

இந்நிலையில், ஜிப்ரானின் அலுவலகம் இராஜினாமா தொடர்பில் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

எனினும், செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி பிரபோவோவைச் சந்தித்த பின்னர் கருத்துத் தெரிவித்த ஜிப்ரான், பொதுமக்களிடமிருந்து முன்வைக்கப்படும் அனைத்து விமர்சனங்களையும் கருத்துகளையும் மதிப்பதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலை நீண்டகால அரசியல் சர்ச்சையாக மாறுவதைத் தான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிப்ரானைப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி 120 இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் கையெழுத்திட்ட மனு தொடர்பில் இந்தோனேசிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை விவாதிக்கவிருந்த சில மணித்தியாலங்களுக்கு முன்னரே இந்த இராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் அதிகாரப் போட்டியில் புதிய திருப்பம்

ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டியோவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கும் இடையில் அரசியல் ரீதியான முரண்பாடுகள் அதிகரித்து வரும் பின்னணியிலேயே ஜிப்ரானின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜோகோ விடோடோ, தனது முன்னாள் அரசியல் போட்டியாளரான பிரபோவோ சுபியாண்டியோவுடன் தனது மகன் ஜிப்ரானை இணைத்து தேர்தலில் போட்டியிட ஆதரவளித்திருந்தார்.

இதன் மூலம் இருவரும் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர்.

எனினும், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம், முன்னாள் பொலிஸ் மா அதிபர் லிஸ்தியோ சிகிற் பிரபோவோ உள்ளிட்ட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களின் உரையாடல்களைச் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜோகோ விடோடோவின் முக்கிய ஆதரவாளராகக் கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவை தேசத்துரோகத்திற்கு இணையான செயற்பாடுகளாக இருக்கக்கூடும் என ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சை

ஜிப்ரானுக்கு எதிராக அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தேர்தலுக்கு முன்னர் அவர் சமர்ப்பித்த கல்வி ஆவணங்களை அப்போதைய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.

அவர் சமர்ப்பித்த ஆவணம் பட்டமளிப்புச் சான்றிதழ் அல்ல என்றும், சிட்னியில் அமைந்துள்ள யு.டி.எஸ் கல்லூரியின் வருகைச் சான்றிதழ் மற்றும் கல்விப் பதிவேடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தோனேசிய கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆதரவுக் கடிதம் மாத்திரமே என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இந்தோனேசியாவின் பல்வேறு நகரங்களில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் காட்டுத்தீயைக் கையாளும் விதம் தொடர்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியிலும் துணை ஜனாதிபதியின் இராஜினாமா குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

(ஏபிசி / ராய்ட்டர்ஸ்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular