சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர், அவரை விடுவிப்பதற்காகத் தலையீடு செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தகவலின்படி, சிவராசாவின் குடும்பத்தினர் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து தமது நன்றியை நேரில் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைப் பிரஜைகள் எங்கிருந்தாலும் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தனது பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இனம், மதம் மற்றும் அரசியல் சார்பு வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த முயற்சிக்குப் பங்களித்த அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமது மகன் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சிவராசாவின் பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தனது மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவரை விடுவிப்பதற்கும், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்கும் ஆரம்பம் முதலே தலையீடு செய்த ஜனாதிபதிக்கு சிவராசாவின் தாயார் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சவூதி அரேபியாவுக்குச் சென்று சட்ட உதவிகளை வழங்கிய சட்டத்தரணிகள் மற்றும் தனது மகனின் விடுதலைக்காக ஆதரவளித்த அனைத்து இலங்கையர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமூக ஆர்வலர் ராஜ்குமார் ராஜீவ்காந்தும் இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில், அனோஜன் சிவராசாவின் விவகாரத்தில் தலையீடு செய்வதாகத் தமது முதல் சந்திப்பின்போது ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியமைக்காக நன்றியைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சவூதி அரேபியாவில் பங்களாதேஷைச் சேர்ந்த தம்பதியினர் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட காலப்பகுதியில், சிவராசாவின் பெற்றோர் கடுமையான உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டுள்ளார்.
