HomeTop newsகொழும்பு வெள்ளப்பெருக்கு - அரசாங்கத்தின் ஈராண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்த சஜித்

கொழும்பு வெள்ளப்பெருக்கு – அரசாங்கத்தின் ஈராண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்த சஜித்

அரசாங்கம் நாடு முழுவதும் “ஈராண்டு ஆட்சி நாட்டிற்கு மாட்சி” என்ற தொனிப்பொருளில் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், “ஈராண்டு ஆட்சி நாட்டிற்கு மாட்சி, ஆனால் முழு கொழும்புமே வெள்ளத்தில் மிதக்கிறது” என்று கூற வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலையே ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய இளைஞர் சக்தியின் களுத்துறை, அகலவத்தை தொகுதி அமைப்புக் கூட்டத்தில் இன்று (7) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர்,  “புதிய குளங்களை உருவாக்குவோம் என ஜனாதிபதி பிரஸ்தாபித்த போதிலும், நேற்றைய தினம் முழு கொழும்பும் ஒரு நீர்த்தேக்கமாகவே காட்சி அளித்தது.

மாநகரசபை அதிகாரத்தைக் கைப்பற்றும் போது 6 மாதங்களில் கொழும்பை ஒளிர வைப்போம் என்றனர்.

ஆனால், வடிகால் அமைப்புகளைத் தூய்மைப்படுத்தவோ புனரமைக்கவோ இல்லை என்பது நேற்றிரவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மாநகர பெண் மேயர் இருந்தும் தலைநகரின் வடிகாலமைப்பை சரியாகச் செய்ய முடியாத இந்த அரசாங்கம் எவ்வாறு நாட்டை கட்டியெழுப்பப் போகின்றது?

தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பயந்துபோயுள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில், மக்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே மனித உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் மீறும் புதிய சட்டங்களைக் கொண்டுவரப் பார்க்கின்றது.

நாட்டில் தற்சமயம் நிதிச் சுதந்திரம் இல்லை, நிதிப் பிரச்சினை வந்ததும் IMF இடம் கையேந்துகின்றனர்.

2027 மார்ச் மாதத்துடன் IMF இணக்கப்பாடு முடிவடையும் சூழலில், 2028 முதல் ஆண்டிற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான கடனைச் செலுத்த வேண்டி ஏற்படும்.

ஆனால், அதற்கேற்ற பொருளாதார வளர்ச்சியோ, நேரடி வெளிநாட்டு முதலீடுகளோ அல்லது ஏற்றுமதி வளர்ச்சியோ நாட்டில் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நடைமுறைப்படுத்த முடியாத கோஷங்களை எழுப்பி இளைஞர்களை அரசியல் கருவியாகப் பயன்படுத்தி ஏமாற்றும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அரசியல் தொடர்புகள் அல்லது நட்பு வட்டாரங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், இளைஞர்களின் தகுதி, திறமை மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் அவர்கள் முன்னேற்றத்தின் ஏணியில் உயரே செல்வதற்கான வாய்ப்புகளை ஐக்கிய மக்கள் சக்தி தனது சமூக இணக்கப்பாட்டின் மூலம் உருவாக்கித் தரும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular