HomeUncategorizedஞானசார தேரருக்கு கட்டாய சிறை உடை? சிறைச்சாலை வெளியிட்ட தகவல்

ஞானசார தேரருக்கு கட்டாய சிறை உடை? சிறைச்சாலை வெளியிட்ட தகவல்

கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, கட்டாயப்படுத்தி சிறை உடை அணிய வைக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளைச் சிறைச்சாலைத் திணைக்களம் மறுத்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, ஞானசார தேரர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் ஆட்சேபனைகளையும் மீறி, அவருக்குச் சிறை உடை கட்டாயமாக அணிவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக பல்லேத்தன, சம்பவம் தொடர்பாகச் சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறான சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், சிறைச்சாலை அதிகாரிகள் நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு அமைவாகவே செயற்படுவதாகவும் வலியுறுத்தினார்.

“இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எமக்கு எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை. அவ்வாறான சம்பவம் குறித்து எமக்குத் தெரியாது. நாம் சிறைச்சாலை விதிமுறைகளைப் பின்பற்றுவதால், இத்தகைய சம்பவம் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை” என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிறைத்தண்டனை அனுபவிக்கும் மதத் தலைவர்களுக்கான சிறை உடை விதிமுறைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தொடர்பிலும் சேனக பல்லேத்தன கருத்துத் தெரிவித்தார்.

குறித்த குழுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் கஜநாயக்க உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிறைச்சாலைச் சட்டங்களின் கீழ் நடைமுறையில் உள்ள விதிமுறைகளைத் தன்னிச்சையாக மாற்ற முடியாது எனக் குறிப்பிட்ட அவர், குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சிறைச்சாலைத் திணைக்களம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular