2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) உள்ளிட்ட ஏனைய வரிகளை நீக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒக்டோபர் 9ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி (NPP) வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பாடசாலைப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், கல்விசார் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால், முட்டை மற்றும் சிசுக்களுக்கான பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத பெறுமதி சேர் வரியை அறிமுகப்படுத்துவதற்கு அதில் முன்மொழியப்பட்டிருந்ததையும் நினைவுபடுத்தியுள்ளார்.
எனவே, குறித்த பொருட்கள் மீதான தற்போதைய வரி விதிப்பு முறையை மீளாய்வு செய்து, வாக்குறுதியளிக்கப்பட்ட வரிச் சலுகைகளை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமையைக் குறைக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியமான நிதி நிவாரணத்தை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குழந்தைகளின் கல்வி மற்றும் போதிய ஊட்டச்சத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் இந்த வரிச் சலுகைகள் உதவும் என நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
