HomeTop newsஅரச பல்கலைக்கழகங்களில் 55 புதிய விடுதிகள் - ரூ.2,353 மில்லியன் ஒதுக்கீடு

அரச பல்கலைக்கழகங்களில் 55 புதிய விடுதிகள் – ரூ.2,353 மில்லியன் ஒதுக்கீடு

அரச பல்கலைக்கழகங்களில் 55 புதிய மாணவர் விடுதிகளை நிர்மாணிப்பதற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் 1,500 மில்லியன் ரூபாயும், தற்போதுள்ள விடுதிகளைப் புனரமைப்பதற்காக 853 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டின் அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் கல்வி பயிலும் மொத்தம் 150,815 மாணவர்களில் 63,318 பேருக்கு மாத்திரமே விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது மொத்த மாணவர் எண்ணிக்கையில் சுமார் 42 சதவீதம் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக, ஏனைய நிறுவனங்களின் கீழ் மேலும் 5 அரச பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அவற்றில், இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 465 மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் உள்ள 551 மாணவர்களில் 442 பேருக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 475 உள்ளூர் மாணவர்களில் 80 சதவீதமானோருக்கும், 76 வெளிநாட்டு மாணவர்களில் அனைவருக்கும் விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

எனினும், இலங்கை பெருங்கடல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 1,516 மாணவர்களில் 196 பேருக்கு மாத்திரமே, அதாவது 12.92 சதவீதமானோருக்கு விடுதி வசதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் 8,218 மாணவர்களில் 406 பேருக்கு மாத்திரமே, அதாவது 4.94 சதவீதமானோருக்கு விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அதேபோன்று, தொழிற்கல்வி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (UNIVOTEC) கல்வி பயிலும் 4,348 மாணவர்களில் 332 பேருக்கு, அதாவது 7.6 சதவீதமானோருக்கு மட்டுமே விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வசதி தற்போது பெண் மாணவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கான முறையான விடுதிக் கொள்கை இதுவரை நடைமுறையில் இல்லாத நிலையில், வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, நியாயம் மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்யும் புதிய விடுதிக் கொள்கையொன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும், தனியார் விடுதிகளில் தங்கும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், 1,600 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கக்கூடிய புதிய வளாகத்திற்கு இலங்கை பெருங்கடல் பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தொழிற்கல்வி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 600 ஆண் மாணவர்களுக்கான விடுதிகள், நவீன விரிவுரை மண்டபங்கள் மற்றும் 300 பேர் அமரக்கூடிய சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பல்மாடிக் கட்டடத்தை 80 பேர்ச்சஸ் காணியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த திட்டத்தை 2027 முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உள்நாட்டு நிதியின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular