பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக அமைதி வழிப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று (07) காலை 9.00 மணிக்கு கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெறும் என நிதியகம சந்திம தேரர் தெரிவித்துள்ளார்.
நம் அனைவருக்கும் நாடு, இனம், மதம் மற்றும் கலாசாரம் என அனைத்தும் உள்ளன.
நாங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், நமது கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையைக் களைந்து, பகிரங்கமாகக் கொண்டு வரப்பட்டமை அனைவரின் மனதையும் அதிர்ச்சியடையச் செய்த ஒரு விஷயமாகும்.
இவ்வாறானதொரு முன்னுதாரணம் நாட்டில் எவருக்கும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வது இளைஞர்களாகிய நம் அனைவரினதும் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பாக பௌத்தர் என்ற ரீதியில் வருத்தமடைவதாக ஓய்வுபெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாட்டலி சம்பிக்க ரணவகவும் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், தேரரின் காவி உடையை அகற்றுவதற்குச் சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு அதிகாரமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.
சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் பல்வேறு கருத்துக்களுக்குத் தெளிவுபடுத்தல் வழங்கி அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிகமாக விளக்கமளித்த அவர், பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தினால் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அந்த் தண்டனைக் காலத்தைச் சிறைச்சாலையில் கழிக்கும் போது அவர் தமது காவி ஆடையை அணிய முடியும் எனத் தெரிவித்தார்.
எனினும், விதிக்கப்பட்டது கடுழியச் சிறைத்தண்டனை என்றால் எந்தவொரு நபரும் சிறை ஆடையையே அணிய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தண்டனை பெற்ற ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவரது சிறைத்தண்டனைக் காலம் 3 ஆண்டுகளை விடக் குறைவானதாக இருந்தால், அவர் தண்டனைக்கு முன்னர் அணிந்திருந்த சாதாரண ஆடையை அணிவதற்குச் சிறைச்சாலை அத்தியட்சகர் அனுமதி வழங்க முடியும்.
அத்தகைய சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளுக்கும் காவி ஆடை அணிய அனுமதி வழங்கப்படலாம்.
ஆனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு தராதரத்தைக் கொண்ட நபராக இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது சிறைச்சாலையினால் வழங்கப்படும் ஆடையை அணிந்தே ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டின் சிறைச்சாலைகளில் 63 க்கும் மேற்பட்ட தேரர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் சிறைச்சாலையினுள் சிறை ஆடையையே அணிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
