சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடியது போதும், திறைசேரியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எரிபொருட்கள் மீதான சலுகைகளைப் பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
IMF பிரதானிகளும், பிரதிநிதிகளும் ஜனாதிபதியைச் சந்தித்து, செலவு மீட்பு ஆற்றல் விலை நிர்ணயம் அடிப்படையில், அதாவது செலவை ஈடுசெய்யும் எரிபொருள் விலைக்காக நாட்டின் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளனர்.
செலவை ஈடுகட்டும் எரிபொருள் விலையை அல்லாமல், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருட்களைப் பெற்றுக் கொடுப்பதையே ஜனாதிபதி மக்களுக்கு பெற்றுக் கொடுத்த வாக்குறுதியாக காணப்படுகின்றன.
வரிகளை நீக்கி, திறைசேரிக்குச் செல்லும் பணத் தொகையையும் நிறுத்தி, அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் செல்லும் கமிஷன் தொகைகளையும் நீக்கிவிட்டு, துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருட்களைப் பெற்றுத் தருவோம் என ஜனாதிபதி பிரஸ்தாபித்திருந்தார்.
ஆகவே IMF இன் தீர்மானங்களுக்கு ஏற்ப செயற்படுவதற்கு மக்கள் இவ்வாறு வாக்களிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் IMF இணக்கப்பாட்டை அரசாங்கம் மாற்றியமைக்கும் என்ற எதிர்பார்ப்பிலே மக்கள் ஆணை வழங்கினர்.
ஆனால், அதை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால், இந்த IMF இணக்கப்பாடு அரசாங்கத்திற்கே திரும்பித் தாக்கும் ஆயுதமாக மாறி காணப்படுகின்றது.
ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கத்தால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. IMF உடன் கைச்சாத்திடப்பட்ட கடன் நிலைபேறாக்கல் இணக்கப்பாட்டை மாற்றியமைப்போம் என “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அந்த வாக்குறுதி தற்சமயம் மீறப்பட்டு பழைய முறையிலேயே பழைய இணக்கப்பாடே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்சமயம் நாட்டின் ஜனாதிபதிக்கும், இந்த அரசாங்கத்திற்கும் எரிபொருட்களின் விலைகளை கூட்டுவதற்கு எந்த வித உரிமையும் கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
